பிசினஸ் ஃபார் பிகின்னர்ஸ்
இந்த நூல் எளிமையான படங்களை அடிப்படையாக கொண்டு வணிகம் என்றால் என்ன, அதை நடத்துவதற்கு என்ன செய்யவேண்டும், எதிர்கொள்ளும் சவால்கள், முதலீடு, வணிக விரிவாக்கம், விளம்பரம் என பல்வேறு அம்சங்களை விரிவாக பேசுகிறது. நூல் வணிகத்தை தொடங்கும் தொடக்க நிலையைச் சேர்ந்தவர்களுக்கானது. வணிகத்தில் உள்ள அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்வதற்கான கையேடு என்று கூட கூறலாம். வணிகம் பற்றி சொல்லித்தரும் நிறைய நூல்கள் உள்ளன.
இந்த நூல் வேறுபடுவது எங்கே என்றால், வரையப்பட்டுள்ள அழகான ஓவியங்களில்தான். எளிமையான ஓவியங்கள் வழியாக வணிகத்தை விளக்குகிறார்கள். ஒருவகையில் இது மாணவர்களுக்கான வணிக அறிமுக கையேடு என்று கூறலாம். கடினமான வணிக பதங்களை நூலில் பார்க்க முடியாது. ஆடம்ஸ்மித்தை தேடுபவர்கள் வேறு நூலை தேடி எடுத்து படிக்கவேண்டும். பொதுவாக எளிமையாக வணிகத்தை தொடங்குவது, அதை பதிவு செய்வது, வரி, ஊழியர்களை நடத்தும் விதம் என தினசரி எதிர்கொள்ளும் விஷயங்களை விளக்கியிருக்கிறார்கள். நீங்கள் அதை படிக்கும்போதே எளிதாக புரிந்துகொள்ள முடியும். ஊக்கம் பெற்றீர்கள் என்றால், அதை செயல்படுத்தலாம்.
நூலின் எழுத்தாளர்கள், ஓவியர்களுடன் பக்க வடிவமைப்பாளர்களுடன் கலந்து ஒத்திசைவாக செயல்பட்டால் மட்டுமே இப்படியான அழகான நூல் சாத்தியமாகும். இல்லையெனில் பேருக்கு பதிப்பகம் நடத்தி நூல்கள் என்ற பெயரில் வரும் குப்பையாக மாறியிருக்கும். சின்ன சின்ன வசனங்கள் மூலமே விஷயங்களைப் புரியவைக்கிறார்கள். சில இடங்களில் ஓவியர்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்துவிடுகிறார்கள். ஓவியர்களும் சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள். நூல்களை வாசிப்பவர்கள் அதை எளிதாக உணர முடியும். மொத்தம் 135 பக்கங்கள். விரைவாக நூலை வாசித்து விட முடியும். வணிகத்தை அறிய உதவும் தொடக்கநிலை வரிசையில் சிறந்த நூல்.